கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக மாவட்டங்களில் மிதமான அளவு மழை பெய்து வருகிறது. உள் தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் ஓரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரீரு இடங்களிலும் இன்று மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் சில பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.