கேரளாவுக்கு மீண்டும் கன மழை எச்சரிக்கை…2 நாட்கள் நீடிக்க வாய்ப்பு

திருவனந்தபுரம்:

கேரளாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் கடந்த ஆகஸ்ட்டில் வரலாறு காணாத மழை பெய்தது. இதில் 14 மாவட்டங்களும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 488 பேர் பலியானார்கள். ரூ.20 ஆயிரம் கோடி சேதம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கானோர் வீடுகள், உடைமைகளை இழந்தனர். சீரமைப்பு பணிகள் முழவீச்சில் நடந்து வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு மத்திய குழுவினர் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் கேரளாவில் மீண்டும் கனமழை பெய்யும் என்று மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ‘‘நாளை (25-ந் தேதி) முதல் 26ம் தேதி வரை கேரளாவின் பத்தனம்திட்டா, பாலக்காடு, திரிச்சரூ, இடுக்கி, வயநாடு ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும். இதை குறிக்கும் வகையில் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களில் வானிலையில் மாற்றம் ஏற்படும். அல்லது மோசமான நிலை ஏற்படும் என்பதை மஞ்சள் நிறம் குறிக்கிறது. மழை அளவு 64.4 மி.மீ. முதல் 124.4 மி.மீ வரை இருக்கும்’’ என்று வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளன. இதையடுத்து மாநிலம் முழுவதும் பேரிடர் மீட்பு குழுவினர் தயாராக இருக்க முதல்வர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் கேரளா மக்கள் மீண்டும் பீதியடைந்துள்ளனர்.