புதுடெல்லி: பொருளாதாரக் கொள்கைகள் அடிப்படையிலான உடனடி செய்லபாடுகள், வளர்ச்சியை ஆதரிப்பதற்கான செலவினங்களை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம் என்று ஐஎம்எஃப் அமைப்பு இந்திய அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது.

மேலும், பொருளாதார மந்தநிலை தொடர்ந்தால், ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்களை மேலும் குறைக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோடி அரசின் தொடர்ச்சியான மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் இந்தியப் பொருளாதாரம் கவலைக்கிடமான நிலைக்கு சென்றுகொண்டுள்ளதாக மக்கள்சார்ந்த பல பொருளாதார ஆலோசகர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஐஎம்எஃப் அமைப்பும் இதுதொடர்பான ஆலோசனைகளை மோடி அரசிற்கு வழங்கியுள்ளது.

உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியாவில், நுகர்வு மற்றும் முதலீடுகள் குறைந்து வருதல், வரி வருவாய் வீழ்ச்சி ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் முக்கிய காரணிகள் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், கோடிக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்ட இந்தியா, தற்போது ஒரு குறிப்பிட்ட பொருளாதார மந்த நிலையில் சிக்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. எனவே, இந்த மந்த நிலையை மாற்ற உடனடியாக நடவடிக்கைகள் தேவை என்று அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.