புயல் நிவாரணப் பணிகளில் தாமதமா ? உடனடி நடவடிக்கைக்கு ஆணயர் உறுதி

சென்னை

புயல் நிவாரணப்பணிகளில் தாமதம் குறித்து தகவல் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பல இடங்களில் கஜா புயல் கடும் பாதிப்பை உண்டாக்கி இருக்கிறது. குறிப்பாக டெல்டா பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு நிவாரணப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. ஆயினும் ஒரு சில இடங்களில் நிவாரணப் பணிகள் மந்தமாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சென்னையில் இது குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் செய்தியாளர்களிடம், “கஜா புயலால் பாதிக்கபட்டுள்ள மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 493 முகாம்களில் 2 லட்சத்துக்கு 49 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புயல் சேதம் இந்த அளவுக்கு இருக்கும் என கணிக்க முடியாமல் போனது. எனினும் நிவாரணப் பணிகளை பல்வேறு துறை அதிகாரிகளும் ஊழியர்களும் மும்முரமாக நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் இந்தப் பணிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இந்த நிவாரணப் பணிகளில் தாமதம் என்றால் மக்கள் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். உடனடியாக அது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்: என தெரிவித்துள்ளார்.