சென்னை

மிழகத்தில் உள்ள நுகர்வோரில் 81% பேர் கொரோனா விலை உயர்வால் வேறு பொருட்களுக்கு மாறி உள்ளதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

கொரோனாவால் பல பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டு அதனால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது.   குறிப்பாக பல நிறுவனப் பொருட்களுக்கு இவ்வாறு தட்டுப்பாடு ஏற்பட்டது.   இதனால் வாடிக்கையாளர்கள் நிலை குறித்து பூன் பாக்ஸ் என்னும் இ காமர்ஸ் நிறுவனம் மற்றும் மற்றும் பொருளாதார ஆலோசனைக் குழு ஆகியவை இணைந்து ஒரு கணக்கெடுப்பை நிகழ்த்தியது.

இந்த கணக்கெடுப்பில் கொரோனா நோய்த் தாக்கம் காரணமாக உற்பத்திக் குறைவு ஏற்பட்டுப் பல நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.   ஆகவே அவற்றுக்குக் கிராக்கி ஏற்பட்டுள்ளதால் பல இடங்களில் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

எனவே தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 81% வாடிக்கையாளர்கள் தாங்கள் வழக்கமாக உபயோகிக்கும் பொருட்களில் இருந்து வேறு பொருட்களுக்கு மாறி உள்ளனர்.   இதில் அதிகப்படியாக புதுக்கோட்டை,யில் 87%, தஞ்சாவூரில் 86% மற்றும் விருதுநகர் மற்றும் திருநெல்வேலியில் 85% பேர் வேறு நிறுவனப் பொருட்களுக்கு மாறி உள்ளனர்.

பூன் பாக்ஸ் நிறுவன தலைமை அதிகாரியும் நிறுவனருமான ராமச்சந்திரன் ராமநானதான், “நான் தற்போது வாழும் வாழ்க்கையை கொரோனா தொற்று முழுவதுமாக மாற்றி உள்ளது. ஒவ்வொரு தனி மனிதரும் தங்கள் உபயோகிக்கும் பொருட்களைக் கடந்த ஆறு மாதங்களில் முழுவதுமாக மாற்றி உள்ளனர்.   இருப்பினும் இதில் கிராம மற்றும் நகர்ப்புற மக்களிடையே நல்ல வித்தியாசம் உள்ளது.  கிராமப்புற பெண்களிடையே இந்த மாறுதல் நன்கு தெரிகின்றது.

குறிப்பாக பலருக்கு வருமானக் குறைவு ஏற்பட்டுள்ளதால் பல குடும்பங்களின் உணவுப் பழக்கம் வெகுவாக மாறி உள்ளது.  இதில் பலர் தங்களது அசைவ உணவு பழக்கத்தை விலை அதிகரிப்பு காரணமாக மாற்றி உள்ளனர்.  இதனால் மாமிசம் மற்றும் முட்டை விற்பனை அதிக அளவில் குறைந்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் 89% பேர் இவ்வாறு மாமிசம் மற்றும் முட்டை விலை உயர்வால் தாங்கள் அசைவ உணவைக் குறைத்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.  இதனால் மாமிச விற்பனை 69% மற்றும் முட்டை விற்பனை 60% குறைந்துள்ளன.   இதைப் போல் அரியலூர், புதுக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டங்களில் அசைவ உணவு விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது வாடிக்கையாளர்கள் பல விதங்களிலும் பொருட்களை வாங்கி வருகின்றனர்.  இ காமர்ஸ் தளங்களில் பொருட்கள் வாங்குவது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் இரு மடங்காகி உள்ளது.  இதற்காகப் பல புதிய முறைகளையும் நாடி வரும் வாடிக்கையாளர்கள் பொருட்களை அதிக அளவில் கடனில் வாங்கி உள்ளனர்.

கொரோனா காலத்தில் கிராமங்களில் உள்ள பல சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் வியாபார முறையை மாற்றி அதிக அளவில் கடனில் பொருட்களை அளித்துள்ளனர்.  இந்த 8 மாவட்டங்களில் சுமார் 59% பேர் ஓரு வாரம் முதல் ஒரு மாதத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் கடனில் பொருட்கள் வாங்கி உள்ளனர்.

சுமார் 73% பேர் கொரோனாவால் தங்கள் பணியில்  பாதிப்பு ஏற்ப்ட்டுள்ளதக தெரிவித்துள்ளனர்.  இந்த நிலை குறிப்பாக வீடு திரும்பிய புலம் பெயர் தொழிலாளர்களிடம் அதிகம் காணப்படுகிறது.  வாங்கிய கடனை சுமார் 44% பேர் திருப்பி அளிக்க முடியாத நிலையில் உள்ளனர்.  ஒரு சிலர் தங்கள் வர்த்தக முன்னேற்றத்துக்காகக் கடன் தவணை செலுத்துவதையும் தள்ளி வைத்துள்ளனர்.