நீலகிரி மாவட்ட மக்களை முடக்கிய மழை: மலைப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு (புகைப்படங்கள்)

ஊட்டி:

கேரளாவில் தொடங்கி உள்ள தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலித்து உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மழைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்திலு கடந்த ஒரு வாரமாக அடைமழை பெய்து வருகிறது.

மாவட்டத்தின் பல்வேறு வரலாறு காணாத அளவுக்கு பலத்த மழை பெய்து வருவதால், பெரும் பாலான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது. இன்றும் கனமழை நீடிக்கும் என்றம், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இடைவிடாது பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மக்கள் வீட்டிற்குள்ளேயே முடக்கப்பட்டுள்ள அவலம் நீடித்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், குந்தா, அவலாஞ்சி,  கூடலூர், பந்தலூர்,போன்ற பகுதி களில் வரலாறு காணாத அளவு மழை கொட்டி வருகிறது. கொட்டி வரும் பேய்மழை காரணமாக  50க்கும் மேற்பட்ட இடங்களில், மரங்கள் சாய்ந்து விழுந்து, மண் சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சிறுசிறு பாலங்கள் உடைந்து, மக்களின் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது.

உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் இரு தினங்களாக மின் விநியோகம் துண்டிக்கப் பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணிகளில் மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர் மழை காரணமாக பவானி, மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.  அணையின் நீர்மட்டம் 84.30 அடியாகவும், நீர்வரத்து 45 ஆயிரத்து 761 கனஅடியாகவும், நீர் இருப்பு 18.07 டிஎம்சி ஆக உள்ளது. அணையில் இருந்து பவானி ஆறு, கீழ்பவானி வாய்க்காலில் 205 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

வலாஞ்சி, பைக்காரா, கெத்தை, எமரால்டு உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால், பாதுகாப்பு கருதி, இந்த திறந்து விடப்பட்டுள்ளன.