‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம்: வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

சென்னை:

தேனி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வந்த மாணவர் ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வை எழுதியது தெரிய வந்த நிலையில், இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவரான வெங்கடேசன் என்பவர், தனது மகன் உதித்சூர்யாவை மருத்துவராக ஆக்கும் எண்ணத்தில், மும்பைக்கு அனுப்பி நீட் தேர்வு எழுத வைத்து வெற்றி பெற்று, தேனி மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க சேர்க்கப்பட்டார்.

ஆனால், நீட் தேர்வை உதித்சூர்யா எழுதவில்லை என்ற தகவல் வெளியானது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் ஆள்மாறாட்டம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் மாணவர் உதித்சூர்யா மற்றும் மருத்துவர் வெங்கடேசன் குடும்பத்தோடு தலைமறைவானார். இதில் முறைகேடு நடைபெற்றதும் வெளிச்சத்துக்கு வந்தது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  போலீஸ் நிலையத்தில், கல்லூரி முதல்வர் புகார் செய்தார். அதன்பேரில், மாணவர் உதித்சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  தலைமறைவாகி உள்ள மருத்துவர் வெங்கடேசன் குடும்பத்தினரை  தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த ஆள்மாறாட்ட புகார் கடுமையான சர்ச்சைகளை எழுப்பி உள்ள நிலையில், இந்த முறை கேட்டில் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.  மேலும் பலர் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனால் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள் ஆகியோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து தமிழக டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.