லக்னோ:  நீட் தேர்வில் மாணவர்களுக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய 2 மருத்துவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவப் படிப்பு நுழைவு தேர்வான நீட் நுழைவுத்தேர்வில், ஆள்மாறாட்டம்  செய்யப்பட்டு, இடம்பிடிக்கும் முறைகேடான செயல் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு தமிழத்தில் ஆள்மாறாட்டம் மூலம் பல மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்தது தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில்,  நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. உத்திரபிரதேசத்தில் பிரக்யராஜ் பகுதியை சேர்ந்த சகில் சோன்கர் என்ற மாணவர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், டெல்லியில் உள்ள ரோகினி செக்டாரில் இருக்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளியில்  அவருக்கு தேர்வு எழுத மையம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த மையத்தில், சகில் சோன்கருக்கு பதிலாக, காப்பூர் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும்  அவத் பிகாரி  என்ற எம்.பி.பி.எஸ் மருத்துவர் ஆள் மாறாட்டம் செய்து நீட் தேர்வினை எழுதியுள்ளார்.  அதுபோலஇ அனுப் படேல் என்ற மாணவருக்கு பதிலாக சச்சின் குமார் மவுரியா என்ற எம்.பி.பி.எஸ் மருத்துவர் நீட் தேர்வு எழுதியுள்ளார்.
இந்த சம்பவத்தில் போலீசார், இரண்டு மருத்துவர்கள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர்.