நீட் தேர்வில் ஆள் மாறாட்டம்: மகாராஷ்டிராவில் தேர்வெழுதி தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவன் தலைமறைவு!

மதுரை:

நீட் தேர்வை மகாராஷ்டிராவில் ஆள் மாறாட்டம் செய்து தேர்வெழுதி தேனி மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்த மாணவர், அவர் மீதான புகார் எழுந் தநிலையில், திடீரென கல்லூரிக்கு வராமல் தலைமறைவாகி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆள்மாறாட்டம் தொடர்பாக அந்த மாணவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

மருத்துவப்படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வு  இந்தியா முழுவதும் கடந்த 2018 மே மாதம் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர், தேனி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க சேர்ந்துள்ளார். இவரது நீட் அட்மிஷன் கார்டில் உள்ள புகைப்படமும், தேனி மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக எடுக்கப்பட்ட புகைப்படமும், வெவ்வேறாக இருந்ததால், கல்லூரி நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

‘இது தொடர்பாக தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர்  மாணவனின் விவரத்தைக் கூறி, விசாரிக்கும்படி தமிழக  சுகராதரத்துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

விசாரணையில், சம்பந்தப்பட்ட மாணவன் சென்னையில் நீட் தேர்வு எழுதி 2 முறை  தோல்வியடைந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அவரது புகைப்படங்கள் மாறி இருப்பதால், ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் சம்பந்தப்பட்ட மாணவன், கல்லூரிக்கு வராமல் தலைமறைவாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.