விழுப்புரம்: தமிழகஅரசின் புதியசட்டத்தின்படி, 7.5% உள்ஒதுக்கீடு அமல்படுத்தினால், மேலும் 325 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழகத்தில் டாக்டர் படிக்கும் வாய்ப்பு  கிடைக்கும் என தமிழக சட்டஅமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

அதிமுகவின் 49-வதுஆண்டு தொடக்க விழாவையொட்டி இன்று (அக்டோபர். 17) விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்டச்செயலாளரான அமைச்சர் சி.வி.சண்முகம் கட்சிக் கொடியேற்றி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தி, அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளது வரவேற்கக் கூடிய ஒன்று. இதனை மேலும் அதிகப்படுத்துவதற்காக தான் மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான சேர்க்கையில், 7.5 சதவிகிதம் அரசுப் பள்ளிகள் மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை  ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார். இதற்கு விரைவில் அவர் ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கிறோம்.  நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு குறைவு. சதவீதக் கணக்கை எடுத்துப் பார்த்தால் மிக மிகக் குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு 4 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் இந்த ஆண்டு மேலும், 300-லிருந்து 325 மாணவர்கள் படிக்க வாய்ப்பு கிடைக்கும்,

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற வழக்கில், ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குக் கலந்தாய்வு நடத்தப்படாது என்று அரசு தெரிவித்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.