மும்பை: இறக்குமதி செய்யப்பட்ட முக்கியமான கச்சாப் பொருட்கள், புதிய விதிமுறைகளின் காரணமாக, இந்திய துறைமுகங்களிலேயே முடங்கியிருப்பதால், கொரோனா மருந்துகளான ரெம்டெசிவிர் மற்றும் ஃபவிபிராவிர் ஆகிய மருந்துகள் தயாரிப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனோடு சேர்த்து, இதர முக்கிய உயிர்காக்கும் மருந்துகள் தயாரிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நாடெங்கிலும் முக்கிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மருந்துகளுக்கான கச்சாப் பொருட்கள் தவிர, இன்ஃப்ராரெட் தெர்மோமீட்டர் மற்றும் நாடி பார்க்கும் ஆக்ஸிமீட்டர்கள் கிடைப்பதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் மருந்து நிறுவனங்கள், இப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளன. மேலும், தொழில்துறை அமைப்புகள், இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனே தலையிட்டு, தற்போது ஏற்பட்டிருக்கும் தேவையற்ற தாமதத்தைக் களைய வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.