டில்லி

சீனப் பொருட்களுக்கு எதிர்ப்பு உள்ளதால் மற்ற நாடுகள் மூலம் சீனப் பொருட்கள் நுழைவதையொட்டி இந்திய அரசு இறக்குமதி தீர்வையை உயர்த்தி உள்ளது.

இந்தியாவில் சீனப் பொருட்கள் விற்பனை ஏராளமாக உள்ளன.  அவை தொழிலகங்களுக்கான மூலப்பொருட்களில் இருந்து தினசரி உபயோகப் பொருட்கள் வரை அனைத்தும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.   சீனப்படைகள் இந்திய ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலுக்குப் பிறகு சீனப் பொருட்களுக்கு நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  அதையொட்டி சீனப்பொருட்கள் இறக்குமதி குறைக்கப்பட்டுள்ளது.

எனவே சீன உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை மற்ற நாடுகள் மூலம் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கி உள்ளனர்.  சமீபத்தில் சீன அளவு நாடாக்கள் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.  இவை சிங்கப்பூர் மற்றும் கம்போடியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.  இந்த இரு நாடுகளிலும் இவை உற்பத்தி ஆவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு இந்தியாவுக்கு வேறு நாடுகள் மூலம் சீனப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதைத் தடுக்க இந்திய அரசு இறக்குமதி தீர்வையை அதிகரித்துள்ளது.  அதன்படி ஸ்டீல் அளவு நாடாக்களுக்கு ஒரு கிலோவுக்கு 1.83 டாலர்  எனவும் ஃபைபர்கிளாஸ் அளவு நாடாக்களுக்கு ஒரு கிலோவுக்கு 2.56 டாலர் எனவும் இறக்குமதி தீர்வை விதிக்கப்படுகிறது  இந்த மாறுதல் ஜூலை 8 முதல் அனைத்து நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அளவு நாடாக்களுக்கும் விதிக்கப்படுகிறது.