ஈரான் மற்றும் ரஷ்யா உடனான வர்த்தகம் இந்தியாவுக்கு உதவாது : அமெரிக்கா

வாஷிங்டன்

ரானிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகள் வாங்குவது இந்தியவுக்கு உதவாது என அமெரிக்க செய்தி தொடர்பாளர் கூறி உள்ளார்.

ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொண்டது முதல் அந்த நாட்டை அடியோடு அழிக்க எண்ணம் கொண்டது போல் நடந்துக் கொள்கிறது. ஈரானுக்கு பொருளாதார தடை விதிப்பு, அந்நாட்டுடன் எண்ணெய் வர்த்தகம் செய்வோருக்கு மிரட்டல் என பல வழிகளில் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதிக்குள் அனைத்து நாடுகளும் ஈரானுடனான வர்த்தகத்தை முழுவதுமாக நிறுத்த வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் இந்திய எண்ணெய் வளத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வரும் நவம்பர் மாதம் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க ஒப்பந்தம் இட்டுள்ளார். இது அமெரிக்காவுக்கு இந்தியா மீது கடும் அதிருப்தியை உண்டாக்கியது. அத்துடன் இந்தியாவை ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணைகள் வாங்கக்கூடாது எனவும் மீறி வாங்கினால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கபடும் எனவும் அமெரிக்கா மிரட்டல் விடுத்தது.

ஆனால் அமெரிக்காவின் மிரட்டலை மீறி சமீபத்தில் ரஷ்யாவுடன் எஸ் 400 ஏவுகணைகள் வாங்க இந்தியா ஒப்பந்தம் இட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க செய்தி தொடர்பாளர் நவுரெத் “அமெரிக்காவின் பேச்சை மீறி இந்தியா ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் இட்டுள்ளது. மற்றும் ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை வாங்க ஒப்பந்தம் இட்டுள்ளது. இது எந்த விதத்திலும் இந்தியாவுக்கு உதவியாக இருக்காது.

இதனால் இந்தியா மீது அமெரிக்கா கடும் அதிருப்தியில் உள்ளது. எங்கள் நிலைப்பாடு என்ன என்பதை ஏற்கனவே அனைத்து நாடுகளுக்கும் தெரிவித்து விட்டோம். ஈரானுடன் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு அமெரிக்கா பலமுறை முயன்றும் ஈரான் ஒத்துழைப்பு தரவில்லை.

அத்தகைய நாட்டுடன் இந்தியா வர்த்தகம் புரிவதால் அது இந்தியாவுக்கு எவ்விதத்திலும் பயன் அளிக்காது. இந்தியாவின் இத்தகைய நடவடிக்கைகளை அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருகிறது. விரைவில் இது குறித்து முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.