வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் வெற்றிபெற்றால், இயற்கையான கூட்டாளி இந்தியாவுடன், உறவை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார் ஜோ பைடன்.
அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன், இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக களமிறங்குகிறார்.
“அப்பிராந்தியத்தில், இருநாடுகளும் பரஸ்பரம் தங்களுடையப் பாதுகாப்பிற்கு, கூட்டாளியாக இருப்பது அவசியம். இருநாடுகளுமே இயற்கையான கூட்டாளிகள்” என்று கூறினார் ஜோ பைடன். ஒரு நிதித்திரட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவர் இதைக் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது, “இது ஒரு வியூகரீதியான கூட்டணியாகும். நமது பாதுகாப்பிற்கு இந்தக் கூட்டணி முக்கியமானது. இந்திய – அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்திற்கு, அமெரிக்கா நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறுவதில் நான் பங்காற்றினேன் என்பதை பெருமையாக கூறிக்கொள்கிற‍ேன்.
ஒபாமா – பைடன் நிர்வாகத்தில், இந்தியாவுடனான உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதுபோல், நான் அதிபராக தேர்வுசெய்யப்படுகையில் அந்நிலை தொடரும்” என்றார் அவர்.