டில்லி

கொரோனா வைரஸ் மருந்து குறித்து வந்துள்ள தகவல் இதோ


கொரோனா வைரஸை ஒழிக்கும் முயற்சியில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜியை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு மூன்று மருந்துகளைச் சோதனை   நடத்தி வந்தது. இந்த  முயற்சியில் தற்போது வெற்றி கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.. இந்த ஆய்வுகளின் முடிவில் உருவாக்கப்படும் மருந்துகள் தற்போது அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன.  ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் மூன்று மாதங்களுக்குள் இந்த மருந்துகள் பொது மக்களுக்கு விற்பனைக்குக் கிடைக்கும்.

இதில் பெரிதும் நம்பப்படுவது ஃபேவிபிரவிர் (Favipiravir) எனும் மருந்து.  இது சீனாவிலும், ஜப்பானிலும் கொரோனா தாக்குதலுக்குப்பட்டவர்களின் சிகிச்சைக்கு வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்ட மருந்தாகும்.  மேலும் சீனாவில் ஏற்கெனவே சார்ஸ் Cov1 தாக்குதலின் போதும் சிகிச்சைக்காகப்  பெரிதும் பயன்படுத்தப்பட்ட மருந்து இது.

அடுத்து பலோக்சவிர் (Baloxavir) எனும் ஆன்டி-வைரல் மருந்து மருத்துவ ஆய்வுக்குட்படுத்தப்பட்டு பரிசோதனைகளில் மிகவும் பாதுகாப்பானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூன்றாவது மருந்து ரெம்டிசிவிர் (Remdesiver) எனும் மற்றுமொரு ஆன்டி-வைரல் மருந்து.  ஆனால் இந்த மருந்துக்கான காப்புரிமையை Gilead எனும் நிறுவனம்  பெற்றுள்ளது.

ஐஐசிடி விஞ்ஞானிகள் இந்த மருந்துகளின் பல்வேறு மூலக்கூறுகளைத் தொடர்ந்து ஆராய்ந்து வந்ததில், பரிசோதனைகளில் இவை வெற்றி பெற்றுள்ளன.  மேலும் இரண்டாம் கட்ட சோதனைகளையும் வெற்றிகரமாகக் கடந்துள்ளன.

இதன் இயக்குநர் டாக்டர். சந்திரசேகர், “இதுவரை பல்வேறு வகையான  மூலக்கூறுகளை ஆராய்ந்ததில், 25 ஆன்டி-வைரல் மருந்துகள் மட்டுமே அடுத்த கட்ட சோதனைகளுக்குத் தகுதி பெற்றன.  இவற்றில் நச்சுயியல் (Toxicology) சோதனை அறிக்கையில் 14 மூலக்கூறுகள் பாதுகாப்பானவையாக அறியப்பட்டன.  இந்த 14 மூலக்கூறுகளில் மூன்று மருந்துகளின் மூலக்கூறுகள் கொரோனா வைரஸின் RNA-யுடன் ஒத்துப்போவதால் இவற்றை கொரோனா தொற்றுக்கு மருந்தாக உபயோகிக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

இந்திய விஞ்ஞானிகளின் இந்த தீவிர முயற்சிக்கான பலன் குறித்து பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்

– ஏழுமலை வெங்கடேசன்