அஸ்ஸாம் பாஜக கூட்டணியில் விரிசல் – முக்கிய கட்சி வெளியேறியது!

குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில், பாஜக  கூட்டணியிலிருந்த போடோலேண்ட் மக்கள் முன்னணி(பிபிஎஃப்) என்ற கட்சி, கூட்டணியிலிருந்து திடீரென்று விலகி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது.

அடுத்த மாதம் அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் சூழலில், இந்தப் புதிய வரவு, காங்கிரஸ் கூட்டணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டணி மாறுதல் தொடர்பாக, பிபிஎஃப் கட்சியின் தலைவர் ஹக்ரமா மொஹிலரி கூறியிருப்பதாவது, “மாநிலத்தில் அமைதி, ஒற்றுமை, முன்னேற்றம் மற்றும் நிலையான ஆட்சி, ஊழலற்ற நிர்வாகம் இவற்றைக் கொண்டுவர, காங்கிரஸ் தலைமையிலான மஹாஜத் கூட்டணியில் இணைவதற்கு பிபிஎஃப் முடிவு செய்துள்ளது.

இனிமேல், எங்கள் கட்சிக்கும் பாரதீய ஜனதாவுக்கும் எந்த உறவுமில்லை. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், மஹாஜத்துடன் கரம் கோர்த்து செயல்படுவோம்” என்றுள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்தக் கட்சி, கடந்த சட்டமன்ற தேர்தலில் 12 இடங்களை வென்றதோடு, பாஜக கூட்டணியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.