சென்னை

ன்று முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  கடந்த இரு தினங்களாகத் தமிழகத்தில் பாதிப்படைவோர் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளன.  கொரோனாவால் உயிர் இழப்போர் எண்ணிக்கையும் 40 ஐ தாண்டி வருகிறது. குறிப்பாகச் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.

இதையொட்டி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  வரும் 30 ஆம் தேதி வரை அமலில் உள்ள இந்த ஊரடங்கு காலத்தில் விதிகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் எனத் தமிழக அரசு காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.  நேற்று நள்ளிரவு முதல் 288 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடந்து வருகிறது

சென்னை நகரின் அண்ணாசாலை, ஈவெரா சாலை, காமராஜர் சாலைகள் நேற்று நள்ளிரவுடன் மூடப்பட்டு சீல் வைக்கபட்டுளன. பல சாலைகளில் இரும்பு தடுப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  கண்காணிப்பு பணியில் சுமார் 18000 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வாகனத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது   குறிப்பாக 21 மற்றும் 28 தேதிகளில் மருத்துவ வாகனங்களைத் தவிர வேறு எதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை வாங்க 2 கிமீ தூரத்துக்குள் நடந்து செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.   சென்னை நகருக்கு வெளியே பணி புரியும் நபர்கள் பணிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  தனியார் தொழிலகம் மற்றும் நிறுவனங்களில் பணி புரிவோர் அங்கேயே தங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.   நகரில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்பு அளிக்கப்பட்டுள்ள இ பாஸ் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதால் புதிய இ பாஸ் வாங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது   ஊரடங்கின் போது அரசு உத்தரவை மதிக்காமல் சுற்றித் திரிவோர், சமூக இடைவெளியைப் பின்பற்றாதோர், முகக் கவசம் அணியாதோர்,  அனுமதிக்கப்படாத நேரத்தில் விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.