அலகாபாத்: மனப்பூர்வ திருமணங்களுக்கு, சிறப்பு திருமணச் சட்டத்தின் பிரிவு 6ன் படி, நோட்டீஸ் வெளியிடுவதோ அல்லது பிரிவு 7ன் படி ஆட்சேபணைகளைப் பெறுவதோ கட்டாயமில்லை என்று தீர்ப்பளித்துள்ளது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

இத்தகைய விதிமுறையானது, குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், குடிமக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப திருமண ஜோடிகளை தேர்வுசெய்து கொள்ளும் சுதந்திரத்தையும் இது பாதிக்கிறது என்றுள்ளார் நீதிபதி விவேக் செளத்ரி. இந்த தீர்ப்பு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக கருதப்படுகிறது.

திருமணச் சட்டம் 1954, பிரிவு 5ன்படி, நோட்டீஸ் வழங்குகையில், மனப்பூர்வ திருமணத்திற்கு, தரப்புகள், திருமண அதிகாரி நோட்டீஸை வெளியிட வேண்டும் அல்லது வெளியிடக் கூடாது என்று எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கக்கூடிய வாய்ப்பு இருந்தது. இதை விருப்பமிருந்தால் பயன்படுத்தலாம்.

இந்நிலையில், அவ்வாறு எழுத்துப்பூர்வ கோரிக்கை வராத பட்சத்தில், அச்சட்டத்தின் பிரிவு 6ன்படி, நோட்டீஸை வெளியிட்டு, ஆட்சேபணைகளைப் பெற வேண்டிய கட்டாயம், திருமண அதிகாரிக்கு இல்லை என்பதே தற்போதைய நீதிமன்ற தீர்ப்பு.