தூத்துக்குடியில் இறக்குமதி வெளிநாட்டு மணல் விற்பனை: தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை:

தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணல் இன்று மாலை முதல் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் தனியார் நிறுவனம் 55,000 டன் மணலை இறக்குமதி செய்திருந்தது. அதை அங்கிருந்து எடுத்துச்செல்ல தமிழக அரசு அனுமதிக்கவில்லை. அது தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில், ஒரு டன் 2050 ரூபாய்க்கு  வாங்க ஏற்கனவே தமிழக அரசு ஒப்புதல் அளித்திருந்தது. எனவே இந்த மணலை வாங்கியதற்கான தொகையை நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதுதொடர்பான வழக்கில், வெளிநாட்டு மணலுக்கான தொகை ரூ.11.27 கோடியை ஒரு வாரத்தில் செலுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் வெளிநாட்டு மணல் விற்பனை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் இன்று மாலை 4 மணி முதல் விற்பனைக்கான முன் பதிவு தொடங்கப்பட உள்ளது.

இந்த மணலை TNsand இணையதளத்திலும், கைபேசி செயலி மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். முதல்கட்டமான துறைமுகத்தில் 11,000 யூனிட் மணல் மட்டுமே வழங்கப்பட உள்ளது. எனவே முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

தற்போது முன்பதிவு செய்து விட்டால், அடுத்த வாரம் முதல் மணல் வழங்கப்படும். TNsandல் பதிவு செய்யாத வாகனங்களுக்கும் மணல் வழங்கப்படும். ஏற்கனவே மணல் விலை குறித்து உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி ஒரு யூனிட் (சுமார் 4.5 MT) மணல் ரூ.9,990 ஆகும்.

 துறைமுகத்தில் விற்கப்படும் மணல் விலை: 

1 யூனிட் (சுமார் 4.5 MT) மணல் ரூ.9,990 

2 யூனிட் – ரூ.19,980 

3 யூனிட் – ரூ.29,970 

4 யூனிட் – ரூ.39,960 

5 யூனிட் – ரூ.49,950