திருச்சி:

துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், திருச்சிக்கு வந்துள்ளது. இந்த வெங்காயம் கிலோ ஒன்றுக்கு ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் பல மாநிலங்களில் பெய்த பலத்த மழை காரணமாக, வெங்காயப் பயிர்கள் அழுகி நாசமானது. இதனால், நாட்டில் வெங்காயம் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து வெங்காயத்தின் விலையும் உச்சத்தில் உள்ளது.

இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்தியஅரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, கடந்த வாரம் எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு மாநிலங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. இதில், தமிழகத்தின் தேவைக்காக  பெரிய வெங்காயம் 60 டன்னும், சின்ன வெங்காயம் 30 டன்னும் என மொத்தம் 90 டன் வெங்காயம் முதல்கட்டமாக திருச்சிக்கு வந்தடைந்து உள்ளது.

இந்த வெங்காயம் தற்போது  மொத்த விற்பனைக் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் கிலோ 60 முதல் 110 ரூபாய் வரையிலும், சின்ன வெங்காயம் கிலோ 40 முதல் 90 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

துருக்கியிலிருந்து 11 ஆயிரம் டன் வெங்காயம்  இறக்குமதி செய்ய உள்ளதாக   மத்தியஅரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது வெங்காயம் இறக்குமதியாகி வருகிறது. அதே வேளையில்,  வெங்காயத்தைப் பொதுமக்களுக்குக் கிலோ ரூ.52-55 என்ற விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. ஆனால், தமிழகத்தில் வெங்காத்தின் விலை ரூ.100ஐ தாண்டியே விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.