தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பெயரில் மோசடி ஆசாமியின் தொலைபேசி அழைப்பு

டில்லி

மோசடி ஆசாமி ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பேசுவதாக கூறி தெலுங்கானா மற்றும் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளிடம் தொலைபேசியில் உரையாடி உள்ளார்.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் செய்யும் உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் தலைiராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பொறுப்பு வகித்து வருகிறார். தற்போது கர்நாடக மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நாராயண சாமி பதவி வகித்து வருகிறார். தெலுங்கானா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ராதாகிருஷ்ணன் பதவி வகிக்கிறார்.

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நாராயண சாமிக்கு ஒரு மோசடி ஆசாமி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் காரியதரிசி ஜுனேஜா பேசுவதாக தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளார். அப்போது அவர் ரஞ்சன் கோகாய் சார்பாக தாம் பேசுவதாகவும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு தேர்வு செய்ய வழக்கறிஞர்கள் பெயரை தயார் செய்யுமாறு கேடுக் கொண்டுள்ளார்.

இரண்டு தினங்களுக்கு பிறகு மீண்டும் நாராயண சாமியை அழைத்த அந்த மோசடி நபர் தலைமை நீதிபதி நேரடியாக பேச விரும்புவதாக கூறி உள்ளார். அதன் பிறகு அதே மோசடி நபர் ரஞ்சன் கோகாய் போல் குரலை மாற்றி வழக்கறிஞர் பட்டியலை அனுப்பச் சொல்லி உள்ளார். இதே நிகழ்வு தெலுங்கானா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராதாகிருஷ்ணனிடமும் நடந்துள்ளது.

இந்த தொலை பேசி அழைப்பு ரஞ்சன் கோகாயிடம் இருந்து வந்துள்ளதாக இரு நீதிபதிகளும் நம்பி உள்ளனர். இது குறித்து மேலும் விவரங்கள் கோரி அவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகிய போது இந்த மோசடி குறித்து தெரிய வந்துள்ளது. இதை ஒட்டி உச்சநீதிமன்ற பொதுச் செயலர் சஞ்சீவ் கல்கான்கர் ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் திலக் நகர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி பேர்வழி யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால் அவர் உச்சநீதிமன்ற தொலைபேசியில் இருந்து பேசி உள்ளது மட்டும் தெளிவாகி உள்ளது. இது குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உச்சநீதிமன்ற அதிகாரிகளில் உயர்மட்ட கூட்டத்தை கூட்டினர்.

அந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட தொலை தொடர்பு பிரிவு அதிகாரிகளிடம் தலைமை நீதிபதி மொபைல் போன்களை உச்சநீதிமன்ற தொலைபேசி இணைப்பகம் மூலம் செயல்படுத்த முடியுமா என்பது குறித்து ஆராய உத்தரவிட்டுள்ளார். தனது பெயரைக் கூறி வரும் எந்த ஒரு தொலைபேசி அழைப்புக்களையும் நம்ப வேண்டாம் என அனைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ரஞ்சன் கோகாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.