சம்பள பாக்கியையும் கொடுக்க இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தல்….!

--

கொரோனா நெருக்கடி காரணமாக திரைத்துறையும் முடங்கியுள்ளதால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் மார்ச் மாதம் வரை செய்த வேலைக்கே சில தயாரிப்பாளர்கள் பணம் தரவில்லை எனத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து பல்வேறு கலைஞர்களும் தங்களுக்கு சம்பள பாக்கி இருப்பதாகக் கூறி வரும் நிலையில், இந்திய தயாரிப்பாளர் சங்கம் தங்களின் உறுப்பினர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

“அரசாங்கத்தால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், நமது உறுப்பினர்களுக்காக பணியாற்றிய இன்னும் சம்பளம் பெறாத பணியாளர்கள்,தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் நிலை மிக மோசமாக மாறியுள்ளது அனைத்து உறுப்பினர்களுக்கும் தெரிந்திருக்கும்.

நமது உறுப்பினர்களுக்கும் பணத்தட்டுப்பாடு உள்ளது, பிரச்சினைகளை சந்திக்கின்றனர் என்பதையும் நாங்கள் அறிவோம். ஆனால் மனிதாபிமான அடிப்படையில், நமது உறுப்பினர்கள், அவர்களின் தயாரிப்புகளுக்காக யாரிடமாவது வேலையைப் பெற்றிருந்தால் அதற்கான சம்பள பாக்கி எவ்வளவு முடியுமோ அவ்வளவைத் தந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இது போன்ற கடினமான சூழலில் அந்தப் பணியாளர்கள் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள். அவர்களின் தினசரி அத்தியாவசியத் தேவைக்கு ஏதுவான பணம் அவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்தக் கடினமான சூழலில், பணியாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் ஆகியோர் கண்ணியத்துடன் பிழைக்கத் தேவையான விஷயங்களை நம் உறுப்பினர்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.