மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்கும் பணியில், போர்வெல் மூலம் துளையிடுவதில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயதுடைய சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. சுர்ஜித்தை மீட்க 2 மீட்டர் தொலைவில், 90 அடி ஆழத்திற்கு புதிய குழி ஒன்று தோண்டப்பட்டு, பின்னர் பக்கவாட்டில் குழி தோண்டி மீட்க அதிகாரிகள் முடிவெடுத்த நிலையில், இதற்காக பிரத்யேகமாக ரிக் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. ஆனால் 45 அடிக்கு மேல் ரிக் இயந்திரத்தால் துளையிட முடியாத காரணத்தால், போர்வெல் இயந்திரம் மூலம் பாறைகளில் துளைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலையில் 45 அடிக்கு கீழ் கடினமான பாறைகள் இருப்பதால் போர்வெல் இயந்திரம் மூலம் 6 துளைகள் போடப்பட்டு வருகிறது. போர்வெல் மூலம் இடப்படும் துளைகளை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். போர்வெல் இயந்திரம் மூலம் தற்போது வரை மொத்தம் 65 அடி ஆழம் வரை 3 இடங்களில் முழுமையாக துளையிடப்பட்டுள்ளது. அதாவது பாறைகளில் 20 அடி ஆழம் வரை 3 இடங்களில் முழுமையாக துளையிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 இடங்களில் துளையிட்ட பின்னர் மீண்டும் ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தொடங்கும். 3 துளைகள் போடப்பட்டுள்ள நிலையில் 1 துளையில் இருந்து நீர் கலந்த மண் வெளிவந்திருக்கிறது.

இது ஒருபக்கம் இருக்க 8 மீட்டர் தொலைவில் உள்ள 60 அடி ஆழம் கொண்ட கிணற்றை, அதிகாரிகள் சில நிமிடங்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். அந்த கிணறும் பாறைகள் நிறைந்ததாகவே இருக்கிறது. இது குறித்து அப்பகுதியினரிடம் அதிகாரிகள் கேட்டபோது, கடந்த காலங்களில் போர்வெல் போட்டபோது 100 அடி ஆழம் வரை பாறைகள் இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து 88 அடி ஆழம் வரை போர்வெல் மூலம் துளையிட முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

பல்வேறு துறைகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அப்பகுதிக்கு, தற்போது ஆழ்துளையை இணைக்கும் சுரங்கத்திற்கான இயந்திரம் கோவையில் இருந்து வந்துள்ளது.