இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு அவசரப்பட்டது முதிர்ச்சியற்ற செயல்….இம்ரான்கான் மீது எதிர்கட்சிகள் தாக்கு

--

இஸ்லாமாபாத்:

இந்தியா&பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அமெரிக்காவில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து பேச இந்தியா சம்மதித்தது. காஷ்மீரில் 3 போலீசார் கடத்தி கொல்லப்பட்டனர். மேலும ஒரு இந்திய ராணுவ வீரர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இதனால் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது.

இது குறித்து இம்ரான் கான் கூறுகையில், ‘‘இரு நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் முன்னெடுக்கும் எனது முயற்சிக்கு இந்தியா அளித்த அடாவடியான மற்றும் எதிர்மறை அணுகுமுறை ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும், பெரிய படத்தை பார்க்கும் பார்வையை பெறாத சிறிய மனிதர்கள், பெரிய அலுவலகத்தை ஆக்கிரமித்துள்ளதை எனது வாழ்க்கையில் பார்த்தே வந்துள்ளேன்’ என குறிப்பிட்டிருந்தார்.

‘‘இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாகிஸ்தானுக்கு இணக்கமாக செயல்பட்டால் மோடிக்கு அது பாதகமாக அமையும் என்பதால் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது’ என பாகிஸ்தான் நாளிதழான டான் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையில் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு இவ்வளவு அவசரம் காட்டியது ஏன்? என இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

முன் அனுபவம் இல்லாத பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அவசரமான நகர்வு என அந்நாட்டு இருபெரிய எதிர்க்கட்சிகளான பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக்(நவாஸ்) ஆகியவை விமர்சனம் செய்துள்ளன. ராஜதந்திர தோல்விக்கு இம்ரான்கான்தான் பொறுப்பு. பேச்சுவார்த்தையை நாடுவதற்கு முன்னதாக அதற்கான வீட்டுப் பாடத்தை ஒழுங்காக முடித்த பின்னர் இந்த நடவடிக்கையை அவர் தேர்வு செய்திருக்க வேண்டும்.

நாமாக முன்வந்து சமாதானத்துக்கு கைகொடுப்பது என்பது நமது பலவீனமாக மற்றவர்கள் புரிந்து கொள்ள கூடாது. இந்தியாவுடன் சமாதானம் செய்துகொள்ள பாகிஸ்தான் அவசரப்படுவதுப் போன்ற ஒரு தோற்றத்தை தனது முதிர்ச்சி பெறாத நடவடிக்கையின் மூலம் இம்ரான் கான் உருவாக்கி விட்டதாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் எம்.பி. காவ்ஜாமொஹம்மத் ஆசிப் தெரிவித்துள்ளார்