பழைய பாணியை கையில் எடுக்க முடியாத நிலையில் இம்ரான்கான்?

உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப வேண்டுமெனில், பாகிஸ்தான் தலைவர்களுக்கு கையில் கிடைக்கும் ஒரு எளிதான விஷயம் காஷ்மீர். ஆனால், தற்போது நிலைமை வேறுமாதிரியாக உள்ளது என்கின்றனர் சில அரசியல் பார்வையாளர்கள்.

மோடியின் வெளியுறவுக் கொள்கையை புகழும் அவர்கள் மேலும் கூறுவதாவது, “நரேந்திர மோடியின் இந்தியாவுடன் நிலைமை சீராகப் போகவேண்டுமெனில், காஷ்மீர் மற்றும் தீவிரவாதம் ஆகிய விஷயங்களை கடந்துவர வேண்டிய தேவை இம்ரான்கானின் பாகிஸ்தானுக்கு உள்ளது.

கடந்தமுறை காங்கிரசின் ஆட்சியில், அணுகுண்டு யுத்தம் வந்துவிடுமோ என்ற பயத்தில், பல விஷயங்களில் எந்தவித எதிர்நடவடிக்கைகளும் இந்திய அரசின் சார்பில் எடுக்கப்படவில்லை. ஆனால், தற்போது அந்த பயமெல்லாம் இந்திய அரசிடம் இல்லை.

எதையும் சமாளிப்பது என்ற மனநிலையிலேயே மோடி அரசு உள்ளதால், பாகிஸ்தானுக்கு, இறங்கி வருவதைத் தவிர வேறு வழியில்லை. மேலும், தற்போதைய நிலையில் பாகிஸ்தானின் வெளிநாட்டு கடன்தொகை சுமார் 103 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற மாபெரும் அளவைத் தொட்டுவிட்டது. இந்த கடும் நெருக்கடியிலிருந்தும் அந்த நாடு மீள வேண்டியுள்ளது.

அதேசமயம், இந்தப் பிரச்சினையை திசைதிருப்ப, காஷ்மீரையும் தீவிரவாதத்தையும் இனிமேல் கையில் எடுக்கமுடியாத சூழலும் நிலவி வருகிறது. எனவே, இந்தியாவுடன் சுமூகப் போக்கை கடைபிடிக்க வேண்டுமெனில், தீவிரவாத குழுக்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நெருக்கடி பாகிஸ்தானுக்கு உள்ளது” என்றுள்ளனர் அவர்கள்.