நவாஸ் ஷெரீப்பை மீண்டும் பாகிஸ்தான் அழைத்துவர உத்தரவிட்ட இம்ரான்கான்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், தற்போது பிரிட்டன் நாட்டில் மருத்துவ சிகிச்சைக்காக தங்கியிருக்கும் நிலையில், அவரை பாகிஸ்தானுக்கு திரும்ப அழைத்துவருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளைப் பணித்துள்ளார் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான்.

ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட நவாஸ் ஷெரீப்பிற்கு, உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டதால், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு, சிகிச்சைக்காக லண்டன் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஜாமீன் காலம் முடிந்தும் அவர் நாடு திரும்பாததால், நீதிமன்றத்தில் ஆஜராகாத அவருக்கு, கடந்த, 15ம் தேதி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் கைது, ‘வாரன்ட்’ பிறப்பித்தது. மேலும், ‘வழக்கு விசாரணையில், ஒருவரை ஆஜர்படுத்த வேண்டியது, அரசாங்கத்தின் பொறுப்பு’ என்றும் கூறியது.

இதுதொடர்பாக, பிரதமர் இம்ரான்கான் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், நவாஸ் ஷெரீப்பை மீண்டும் பாகிஸ்தானுக்கு கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஒருவர் இதுகுறித்து கூறியதாவது, “நவாஸ் ஷெரீப்பை எங்களிடம் ஒப்படைக்கும்படி பிரிட்டன் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். எங்களுக்கும் பிரிட்டனுக்கும் இடையே, ஆட்களை ஒப்படைப்பது தொடர்பாக, ஒப்பந்தம் ஏதும் இல்லை.

ஆனால், சிறப்பு ஏற்பாட்டின் கீழ், அவர்கள் நவாஸ் ஷெரீப்பை ஒப்படைக்க முடியும்” என்று கூறியுள்ளார்.