ஆகஸ்ட் 11ல் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கிறார் இம்ரான்கான்

இஸ்லாமாபாத்:

டைபெற்று முடிந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 116 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றள்ளது  இம்ரான் கான் கட்சி. இதைத்தொடர்ந்து ஆகஸ்டு 11ந்தேதி நாட்டின் பிரதமராக பதவி ஏற்க இருப்பதாக இம்ரான்கான்  அறிவித்துள்ளார்.

கடந்த 25ந்தேதி நடைபெற்ற பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் போட்டியிட்ட, முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் ((Pakistan Tehreek-i-Insaf)) எனப்படும் பிடிஐ கட்சி 116 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

முன்னாள் பிரதமரான  நவாஸ் செரீஃபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி 64 இடங்களிலும், மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களிலும் வென்றுள்ளன.

ஆட்சி பொறுப்பேற்க 137 இடங்கள் தேவை என்ற நிலையில்,116 இடங்களை வைத்துள்ள இம்ரான்கான் கட்சி, மேலும் தேவைப்படும் 21 இடங்களுக்காக சுயேச்சைகள் மற்றும் ஒருசில இடங்களில் வெற்றிபெற்றுள்ள சிறு சிறு கட்சிகளிடமும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஆட்சி அமைக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டுள்ள இம்ரான்கான் ஆகஸ்ட் 14ம் தேதி, பாகிஸ்தான் சுதந்திர தினத்திற்கு முன்பு பதவி ஏற்பார் என்று பிடிஐ கட்சி ஏற்கனவே கூறியிருந்தது.

இந்நிலையில் ஆகஸ்ட் 11ம் தேதி பாகிஸ்தான் பிரதமராக தான் பதவியேற்க உள்ளதாக இம்ரான்கான் கூறியுள்ளார்.