பூரிக்கும் தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாகிர் – எதற்காக தெரியுமா?

சென்னை: ஐபிஎல் சென்னை அணி ஒரு குடும்பம் போன்றது என்றும், அதற்கு கிடைக்கும் ரசிகர்கள் ஆதரவைப் போன்று, வேறு எந்த அணிக்கும் கிடைப்பதில்லை என்றும் பூரிப்புடன் கூறியுள்ளார் அந்த அணியில் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாகிர்.

டெல்லி மற்றும் புனே அணியில் இடம்பெற்றிருந்த இவர், கடந்த 2018ம் ஆண்டு சென்னை அணியில் இணைந்தார். இதுவரை, அந்த அணிக்காக தான் விளையாடிய 23 போட்டிகளில், மொத்தம் 32 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “சென்னை அணிக்காக விளையாடியது மகத்தான அனுபவமாகும். அதுவொரு தனிச்சிறப்பான உணர்வை அளித்தது. நாங்கள் ஒரு குடும்பமாக இணைந்து சிறப்பாக ஆடுகிறோம்.

சென்னை அணியில் கிடைக்கும் உணர்வு, எனக்கு வேறு எந்த அணியிலும் கிடைத்ததில்லை. என் குடும்பத்திற்கும் சென்னை அணி என்றால் ஒரு தனிப் பிரியம்தான்! என் மகன் நான் மைதானத்தில் விளையாடுக‍ையில், சென்னை அணியின் பாடலைப் பாடிக்கொண்டிருப்பான்.
இந்த அணிக்கு கிடைத்ததைப் போன்று ரசிகர்கள் ஆதரவு, வேறு எந்த அணிக்கும் கிடைத்து நான் பார்த்ததில்லை” என்றுள்ளார் இம்ரான் தாகிர்.