கர்தார்பூர் காரிடார் திறப்புவிழா – நண்பர் சித்துவுக்கு அழைப்பு விடுத்த இம்ரான்கான்!

லாகூர்: கர்தார்பூர் காரிடார் திறப்பு விழாவிற்கு வருமாறு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய அரசியல்வாதியுமான சித்துவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பதும், கடந்த 1992ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு உலகக் கோப்பையை வென்று தந்தவர் என்பதும் அறிந்ததே.

அவர் பழமைவாதிகளைப் போலன்றி சற்று வித்தியாசமானவர். முஷரப்பின் ஆட்சிக் காலத்தில், பாகிஸ்தானுக்கு விளையாடச் சென்ற இந்திய கிரிக்கெட் அணியினருக்கு விருந்து வைத்தார். ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கு வந்த சமயத்தில் யாரும் இங்கே விருந்து வைக்கவில்லை.

தனது பிரதமர் பதவியேற்பு விழாவிற்கும்கூட சித்து, கவாஸ்கர் உள்ளிட்ட தனது பழைய கிரிக்கெட் நண்பர்கள் சிலரை அழைத்தார். அதில் சித்து மட்டுமே கலந்துகொண்டு விமர்சனத்திற்கு ஆளானார்.

ஆஸ்திரேலியாவில் இந்தியா முதன்முறையாக டெஸட் தொடரை வென்றதற்கும், எதிரி நாட்டு அணி என்று எண்ணாமல் வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில், கர்தார்பூர் காரிடார் திறப்பு விழாவிற்கும் தனது நண்பர் சித்துவை அழைத்து கவுரவித்துள்ளார்.

வரும் 9ம் தேதி, காரிடாரை இம்ரான்கான் திறந்து வைக்கும் விழாவில், தனது நண்பரின் அழைப்பை மீண்டும் மதித்து விழாவில் கலந்துகொள்வாரா? இந்தியப் பழமைவாதிகளின் விமர்சனங்களைப் புறந்தள்ளுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.