இஸ்லாமாபாத்: முன்னாள் இந்தியக் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் தொடர்பான சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை வேறுவிதமாக வரவேற்றுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்.

இந்த தீர்ப்பை இந்திய அரசு உட்பட, இந்தியாவில் அனைவரும் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் நிலையில், பாகிஸ்தான் பிரதமரின் டிவீட் வேறு மாதிரி உள்ளது. அவர் கூறியிருப்பதாவது,

“இந்திய கமாண்டர் குல்பூஷன் ஜாதவை குற்றமற்றவர் என்று கூறாத, அவரை விடுதலை செய்க என்று அறிவுறுத்தாத மற்றும் அவரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புங்கள் என்று உத்தரவிடாத சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்.

குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தான் மக்களுக்கு எதிராக குற்றமிழைத்தவர். எனவே, சட்டப்பூர்வமாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ளும்” என்றுள்ளார்.

இதன்மூலம், சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பால், பாகிஸ்தான் பிரதமர் அதிருப்தி அடைந்துள்ளார் என்று தெரியவருகிறது.

இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ், ஈரான் வழியாக பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவி, பலுசிஸ்தானில் அமைதியைக் கெடுக்கும் வகையில் செயல்பட்டு, இந்தியாவிற்காக உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், அந்நாட்டு ராணுவ நீதிமன்ற விசாரணையின் அடிப்படையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து இந்திய அரசு சார்பில் ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில், வியன்னா மாநாட்டு ஒப்பந்தம் பாகிஸ்தான் அரசால் மீறப்பட்டுள்ளது என்ற வாதத்தை இந்தியா முன்வைத்தது.

இதனடிப்படையில் குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை பாகிஸ்தான் பரிசீலிக்க வேண்டுமென்ற தீர்ப்பை வழங்கியது சர்வதேச நீதிமன்றம்.