இரு ஆண்டுகளில் இந்தியாவுக்கு 10,000 கோடி டாலர்கள் வெளிநாட்டு முதலீடு : அமைச்சர் உறுதி

டில்லி

ந்தியாவுக்கு இன்னும் இரு ஆண்டுகளில் 10,000 கோடி டாலர் அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் வந்து சேரும் என மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

இந்தியா தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது என பல பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மிகவும் குறைந்துள்ளது. இதனால் தற்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அஞ்சுகின்றனர். ஆயினும் அமெரிக்கா மற்றும் சீனா வர்த்தகப் போரினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சுரேஷ் பிரபு, “இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க உள்ள பிரிவுகளை எனது அமைச்சகம் கண்டறிந்துள்ளது. இதன் மூலம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தியாவுக்கு வெளிநாட்டு முதலீடு சுமார் 10,000 கோடி டாலருக்கு மேல் கிடைக்கும்.

ஆனால் அதற்காக நாம் பல நிறுவனங்கள் மற்றும் தொழில் பிரிவுகளை மேம்படுத்த வேண்டும். அத்துடன் முதலீட்டாளர்களை கவர அரசு பல கூட்டங்களை நிகழ்த்த வேண்டும். ஜப்பான், தென் கொரியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. அத்துடன் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய முதலீட்டாளர்களையும் இந்தியாவின் பக்கம் ஈர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.