a
சென்னை:  இன்று  நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தல்  சில நிமிடங்களுக்கு முன் ஆறு மணிக்கு நிறைவடைந்தது. ஆறு மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்கள் மட்டும் தற்போது பல மையங்களில் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். அதன் பிறகு வந்தவர்கள், வாக்குச்சாவடி மையத்துக்குள் விடப்படவில்லை.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழகம் முழுதும்  63.70% வாக்குகள் பதிவாகியுள்ளன. மாலை 6 மணி நிலவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் 80 சதவிகிதத்தை தாண்டும் என்று கூறப்படுகிறது.
கடந்த 2011ம் ஆண்டை ஒப்பிடும் போது 78.1% வாக்குப்பதிவு ஆனது. ஆகவே அதைவிட அதிகமாக இந்த முறை வாக்குப்பதிவு ஆகும்.
இந்தத் தேர்தலில் 100% வாக்குப்பதிவிற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பூத் சிலிப் மட்டுமல்லாது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை எடுத்து வந்து வாக்களிக்கலாம் என்றும் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி  தெரிவித்திருந்தார்.
வாக்குப்பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாரான நிலையில் திடீரென இயற்கை மூலம் தேர்தல் ஆணையத்திற்கு சோதனை வந்தது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நேற்று இரவு முதல் 15 மாவட்டங்களில் மழை பெய்தது.
அதையும் மீறி தமிழகம் முழுதும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.