இந்தியாவில் ஐந்தே மாதங்களில் 25000 சிறார் பாலின பதிவு : அமெரிக்கா எச்சரிக்கை

டில்லி

இந்தியாவில் கடந்த ஐந்து மாதங்களில் சுமார் 25000க்கும் மேற்பட்ட சிறார் பாலின பதிவுகள் தரமேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகெங்கும் சிறார் பாலின பதிவுகள் இணையத்தில் தரவேற்றம் செய்யப்படுவது அதிகரித்துள்ளது.  இதை எதிர்த்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆயினும் இந்த நடவடிக்கைகள் தொடர்கின்றன.  இதையொட்டி அமெரிக்காவில் உள்ள தேசிய காணாமல் போனோர் மற்றும் கொடுமைக்குள்ளான குழந்தைகள் மையம் மற்றும்  தேசிய குற்றவியல் பதிவு ஆணையம் உள்ளிட்டவற்றுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த இரு அமைப்புகளும் லாப நோக்கமற்ற அமைப்புகள் ஆகும்.  இவை இரண்டும் இணைந்து தற்போது ஒரு ஆய்வு நடத்தி அந்தா ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளன.  அந்த ஆய்வு முடிவுகளை அந்த அமைப்புக்கள் இந்திய அரசுக்கு அனுப்பி இது குறித்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வு   முடிவில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலிருந்து 25000க்கும் மேற்பட்ட சிறார் பாலின பதிவுகள் கடந்த 5 மாதங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.   இந்த குற்றங்களில் டில்லி நகரம் முதல் இடத்தில் உள்ளது.  அடுத்த இடங்களில் மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் உள்ளன.

இது குறித்து மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு காவல்துறை அதிகாரி, “இந்த குற்றங்களின் எண்ணிக்கைகள் அனைத்தும் காவல்துறையினரால் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் ஆய்வில் அளிக்கப்பட்டன.   மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை,தானே மற்றும் புனே நகரங்களில் இத்தகைய குற்றங்கள் அதிக அளவில் நிகழ்ந்துள்ளன.  இதில் மும்பை நகரில் மட்டும் சுமார் 500 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.” என தெரிவித்துள்ளார்.

டில்லி, குஜராத் மற்றும் கேரளா மாநில காவல்துறையினர் இது குறித்து பலரைக் கைது செய்துள்ளனர்.    அத்துடன் பல புகார்கள் இன்னும் விசாரணை நிலையில் உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி