புதுடெல்லி:

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 126% வளர்ச்சியாக இருந்த ஏற்றுமதி, கடந்த 5 ஆண்டு கால மோடி ஆட்சியில் வெறும் 10 சதவீதம் மட்டும் அதிகரித்துள்ளது.


கடந்த 2008-09 மற்றும் 2013-14 ஆண்டுகளில் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி ரூ.8.4 லட்சம் கோடியிலிருந்து 19 லட்சம் கோடியாக உயர்ந்தது. மோடி ஆட்சியில் கடந்த 2018-19 கால கட்டத்தில் ரூ.20.8 லட்சம் கோடியாக மட்டுமே அதிகரித்துள்ளது.

மத்திய வர்த்தகத் துறை அமைச்சக தரவுகளின்படி, கடந்த 2019 பிப்ரவரி இறுதியில் 11 மாதங்களில் ஏற்றுமதி ரூ.20.8 லட்சம் கோடியை எட்டியுள்ளது. கடந்த 2017-18-ல் இது ரூ.19.6 லட்சம் கோடியாக இருந்தது.

நகை,ஆடை ஏற்றுமதி சலுகைத் தொகை குறைவாக இருந்ததாலும், இந்தியாவைவிட மற்ற நாடுகளில் சில பொருட்களின் விலை குறைவாக இருந்ததாலும், ஏற்றுமதி குறைந்ததாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்றுமதி குறைந்ததால், சீனாவுடன் மட்டுமின்றி வியட்நாம், மியான்மர், கம்போடியா மற்றும் இந்தோனேஷியா போன்ற ஆசிய நாடுகளுடனும் போட்டிபோட வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

உலக வர்த்தக அமைப்பின் தரவரிசைப் பட்டியலில் ஏற்றுமதியில் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 20-வது இடத்திலும், வியட்நாம் 27-வது இடத்திலும், இந்தோனேஷியா 29-வது இடத்திலும் உள்ளன.