மராவதி

காங்கிரஸ் கட்சி ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணியில் இல்லை எனவும் தனித்து  போட்டியிடும் என்றும் ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்தது.    ஆனால் இரு கட்சிகளும் தேர்தலில் கடும் தோல்வி அடைந்தது.   கூட்டணி அமைக்கப்பட்ட சமயத்தில் இந்த கூட்டணி வரும் மக்களவை தேர்தலிலும் ஆந்திர சட்டப்பேரவை தேர்தலிலும் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

கேரள மாநில முன்னாள் முதல்வரான உம்மன் சாண்டி தற்போது  ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.   அவர் செய்தியாளர்களிடம், “காங்கிரஸ் கட்சி வரும் மக்களவை தேர்தலிலும் ஆந்திர சட்டப்பேரவை தேர்தலிலும் தனித்து போட்டியிட உள்ளது.   ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 25 மக்களவை தேர்தலிலும் காங்கிரஸ் போட்டியிடும்” என தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் தெலுங்கு தேசம் கட்சியிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்டதா என கேட்டதற்கு உம்மன் சாண்டி, “நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன்.  தெலுங்கு தேசம் அல்லது அதன் தலைவர் சந்திரபாபு நாயுடுவை சேர்ந்தவன் இல்லை.  நாங்கள் இது குறித்து எங்கள் கட்சி தலைமையிடம் மட்டுமே தெரிவிக்க வேண்டும்” என பதில் அளித்தார்.

அவர் மேலும், “இது குறித்து நாங்கள் ஏழு குழுக்களை அமைக்க உள்ளோம்.  அவர்கள் இந்த வாரம் வேட்பாளர்கள் குறித்த முடிவுகளை தெரிவிப்பார்கள்.  ஏராளமான காங்கிரசார் தனித்துப் போட்டியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது ராகுல் காந்தியின் பிரசாரத்தினால் காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் பாஜகவிடம் இருந்து ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியதால் காங்கிரஸ் ஆந்திராவில் வெற்றி பெறும் என்னும் நம்பிக்கையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.