பீகார்: கலப்பு திருமண ஊர்வலத்தில் தலித் வாலிபர் சுட்டுக் கொலை…கலவரம் வெடித்தது

பாட்னா:

பீகார் முகாபர்பூர் நகரம் அபி சாப்ரா கிராமத்தில் தலித் வாலிபருக்கும் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. மணமக்கள் ஊர்வலத்தின் போது கலப்பு திருமணம் தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதில் துப்பாக்கியால் சுட்டதில் நவின் மாஞ்சி (வயது 22) என்ற வாலிபர் உயிரிழந்தார்.

தலித் சமூகத்தை சேர்ந்த இவர் திருமண ஊர்வலத்தை முன்னின்று நடத்தினார். இது தொடர்பாக மணமகனின் மைத்துனர் முகேஷ்குமார் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

இச்சம்பவத்தை தொடர்ந்து கலவரம் மூண்டது. கார், வேன், இரு சக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரத்தின் போது திருமண வீட்டாரிடம் நகை பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்களும் நடந்தது. கிராமத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.