பீகாரில் தனி அணியை உருவாக்கும் யஷ்வந்த் சின்ஹா..

பீகாரில் தனி அணியை உருவாக்கும் யஷ்வந்த் சின்ஹா..

கொரோனா களேபரத்துக்கு மத்தியிலும் பீகார் மாநிலத்தில் அக்டோபர் மாதம் சட்டசபைத் தேர்தல் நடப்பது உறுதியாகியுள்ளது.

பா.ஜ.க.-ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் ஒரு அணியும், காங்கிரஸ்- ஆர்.ஜே.டி. தலைமையில் மற்றொரு அணியும் களம் இறங்குவது முடிவான ஒன்று.

பீகார் தேர்தலுக்காக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, சில உதிரி கட்சிகளை வளைத்து புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 15 நாட்களாக பாட்னாவில் தங்கி இருந்து ஆட்கள் திரட்டிய சின்ஹா, நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

‘’ பாட்னா தேர்தலில் புதிய அணியை ஏற்படுத்திப் போட்டியிடுவோம். பா.ஜ.க. கூட்டணி தான் எங்கள் பிரதான எதிரி. பா.ஜ.க.வை வீழ்த்த விரும்புவோர் எங்கள் அணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம்’’ என அவர் பிரகடனம் செய்தார்.

புதிய அணியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.

பேட்டி அளித்த போது அவருடன் மூன்று முன்னாள் எம்.பி.க்கள் உடன் இருந்தனர்.

அவர்களில் ஒருவரான அருண்குமார் , தேர்தல் ஆணையத்தில் ‘ பாரதிய சப்லோக்’ என்ற பெயரில் புதிய கட்சியைப் பதிவு செய்துள்ளார்.

அந்த பெயரில் சின்ஹா அணி, தேர்தலில் களம் இறங்கும் என்று தெரிகிறது.

– பா.பாரதி.