சென்னை: மீன்கள் கெட்டுபோகாமல் இருக்க ரசாயனம் பயன்படுத்தியது அம்பலம்

சென்னை:

மீன்கள் நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாமல் இருப்பதற்காக ரசாயனம் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து நாடு முழுவதும் அதிகாரிகள் மீன் மார்க்கெட்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த வகையில் சென்னையின் பெரிய மீன் மார்க்கெட்களான சிந்தாதிரிபேட்டை மற்றும் காசிமேடு பகுதிகளில் இருவேறு நாட்களில் சோதனை செய்தனர். அப்போது 30 மீன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இவை தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்லைக்கழகத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ஃபார்மலின் என்ற ரசாயனம் மீன்களில் பயன்படுத்தியிருப்பது உறுதியானது. 30 மீன்களில் 11 மீன்களில் இத்தகைய ரசாயனம் இருப்பது உறுதியானது.

இதேபோல் கடந்த 4ம் தேதி சிந்தாதிரிபேட்டை, வேளச்சேரி, நீலாங்கரை மார்க்கெட்களில் சேகரிக்கப்பட்ட 13 மாதிரிகளில் ஒன்றில் ரசாயனம் இருப்பது மாதவரத்தில் உள்ள ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் உறுதியானது. நேற்று சிந்தாதிரிபேட்டை, காசிமேட்டில் சேகரிக்கப்பட்ட 10 முதல் 17 மீன்களில் ரசாயனம் இருந்தது தெரியவந்துள்ளது.

ஃபார்மலின் பயன்படுத்தினால் கண், தொண்டை, தோல், வயிறு ஆகியவை பாதிக்கும். இது நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டால் சிறுநீரகம், ஈரல் பாதிப்பு மற்றும் புற்றுநோயை உருவாக்கிவிடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் மீன்களுக்கு ரசாயனம் பயன்படுத்தியிருப்பது முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் மீன் மார்க்கெட், துறைமுகத்தில் சோதனையிட்டு வருகின்றனர். கடந்த வாரம் கேரளாவில் மீன்களுக்கு ரசாயனம் பயன்படுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,‘‘மீன்களை பதப்படுத்த ஃபார்மலின் பயன்படுத்துவதை ஏற்க முடியாது. எந்த சூழ்நிலையிலும் இதை அனுமதிக்க முடியாது. தூத்துக்குடி உள்ளிட்ட சில பகுதிகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அங்கு ரசாயன பயன்பாடு இல்லை’’ என்றார்.