சென்னையில் அதிமுக எம்எல்ஏவுக்கு எதிர்ப்பு! பாதியிலேயே திரும்பினார்

தி.நகர் தொகுதி எம்எல்ஏ சத்யா

சென்னை:

சென்னை தி.நகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சத்யா பொதுமக்களின் சரமாரியான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பாதியிலேயே திரும்பினார்.

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து 12 நாட்களாக கூவத்தூர் சொகுசு விடுதியில் கும்மாளமிட்ட அதிமுக எம்எல்ஏக்களில் தி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்யாவும் ஒருவர்.

காலையிலேயே மட்டனை கொடுத்து மட்டையாக்கிடுறாங்க…. என்று அரை டவுசர் போட்டுக்கொண்டு பேசிய செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி சத்யாவை ஊரறிய செய்தது.

சசிகலா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலோர் தங்கள் தொகுதிக்கு செல்ல முடியாத நிலையில், தி.நகர் சத்யாவும் வெளியே வர முடியாமல் முடங்கியே கிடக்கிறார்.

இன்று காலை அவர்,  ஜீவா பூங்காவுக்கு நடைபயிற்சிக்கு சென்றார். இதுவரை அவரிடம் அளவளாவிய பொதுமக்கள் தற்போது, அவரை கண்டும் காணாததுபோல சென்றுவிடுகின்றனர். இன்று நடைபயிற்சியின்போது பொதுமக்கள் சிலர் குழுவாக இணைந்து சத்யாவை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தனர்.

அவர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத சத்யா, அவரைகளை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், பொதுமக்கள் விடாமல் அவரை துரத்தினர். இதன் காரணமாக அவர் நடைபயிற்சியை நிறுத்திவிட்டு பூங்காவில் இருந்து வெளியேறிவிட்டார்.

தற்போது தமிழ்நாடு முழுவதும் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஒரு சில இடங்களில் எம்எல்ஏக்களுக்கு எதிரே பேனர் வைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சட்டமன்ற உறுப்பினர்களை எதிர்த்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் பொதுமக்களை சந்திப்பதை தவிர்த்து வருகின்றனர்.