சென்னையில் கொரோனா : சுய தனிமைப்படுத்துதல் விதியை மீறிய மூவர் மீது வழக்கு

சென்னை

வெளிநாட்டில் இருந்து வந்து சுய தனிமைப்படுத்துதல் விதியை மீறிய மூவர் மீது சென்னைக் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  அதில் ஒன்று  வெளிநாடுகளில் இருந்து வந்தவர் அனைவரும் தங்கள் பயண விவரங்களை அரசுக்கு அறிவித்து தங்களை வீடுகளுக்குள் சுயமாக தனிமைப்படுத்துதல் ஆகும்.  ஆனால் ஒரு சிலர் இந்த விதியை மதிக்காமல் நடந்துக் கொள்கின்றனர்.

சென்னை அண்ணா நகரில் சீனாவில் இருந்து வந்த ஒருவர் இந்த சுய தனிமைப்படுத்துதல் விதியை மீறி சென்னையில் இருந்து வெளியூருக்குப் பயணம் செய்துள்ளார்.   அவர் மீது அண்ணா நகர் காவல்துறையினர், அரசு ஊழியரின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமை, உயிருக்கு அபாயம் அளிக்கும் தொற்று நோயைப் பரப்புதல், இது குறித்த உத்தரவை அலட்சியம் செய்தல், உள்ளிட்ட சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.

சமீபத்தில் ஈரான் நாட்டில் இருந்து வந்துள்ள ஒரு தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.  அவர்கள் காவல்துறைக்குத் தகவல் அளிக்காமல் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். இதையொட்டி அவர்கள் மீதும் மேலே குறிப்பிட்ட ச்ட்டங்கள் மற்றும் தனிமை விடுதியில் இருந்து தப்பிச் செல்லுதல் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் கோயம்பேடு காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.

இந்த குற்றங்களுக்கு  இந்தியக் குற்றச் சட்டத்தின் படி ஆறு மாதம் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படக் கூடும்.