டில்லி:

ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் மின்சாரம், சமையல் எரிவாயு, மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை அடங்கிய சவுபாக்யா யோஜனா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

எரிவாயு, மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் தனித்தனி திட்டமாக இருந்து வந்த நிலையில் அவற்றை சவுபாக்யா திட்டம் மூலம் ஒரே திட்டமாக அறிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6.30 மணிக்கு முக்கிய திட்டம் ஒன்றை அறிவிப்பார் என்று நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்திருந்தார். மேலும் அவை ஏழைகளுக்கான திட்டம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தீனதயாள் உபாத்யாய நூற்றாண்டு விழாவையொட்டி பிரதமர் மோடி சவுபாக்யா யோஜனா என்ற புதிய மின் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மின்சார இணைப்பு, சமையல் எரிவாயு சிலிண்டர், மருத்துவ வசதிகள் இணைக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தொடர்பான இந்த திட்டத்தின் மூலம் வரும் 2018-ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கு மின் இணைப்பு கிடைப்பது தான் இலக்கு. இந்த திட்டத்தின் மூலம் ரூ.500 செலுத்தி மின் இணைப்பு பெறலாம். மேலும் ரூ.500-ஐ 10 மாத தவணையில் செலுத்தும் வசதியும் உண்டு.

இதற்காக ரூ.16 ஆயிரத்து 320 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டங்களுக்கு மத்திய அரசு சார்பில் 60 சதவீதமும், மாநில அரசு சார்பில் 10 சதவீதமும், மீதமுள்ள 30 சதவீதம் கடனாகவும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.