ராஞ்சி: பதல்காடி இயக்கம் மீது தொடரப்பட்ட தேச துரோக வழக்குகளை ரத்து செய்ய ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார் ஹேமந்த் சோரன். அவரது பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, மமதா பானர்ஜி, ஸ்டாலின் என பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பதவியேற்ற சில மணி நேரங்களில் தலைமை செயலகத்தில் அமைச்சர்களை சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பிறகு, பழங்குடியின மக்கள் மீதான தேச துரோக வழக்குகளை வாபஸ் என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.

நீர், காடு மற்றும் நிலம் ஆகியவை பழங்குடியினருக்கே சொந்தம் என்பதை உணர்த்துவதற்காக தொடங்கப்பட்ட இயக்கம் தான் பதல்காடி இயக்கம். கடந்த பாஜக ஆட்சியில் இந்த இயக்கத்தினர் மீது ஏராளமான தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

குறிப்பாக, சோட்டா நாக்பூர் குத்தகை சட்டம்  மற்றும் சந்தால் பரகனா குத்தகை சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. அவை அனைத்தும் தற்போது ரத்து செய்யப்படுகின்றன.

அங்கன்வாடி மற்றும் தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கான ஊதியம் உயர்வு அளிக்கவும் அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. பெண்கள், குழந்தைகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் வகையில் விரைவு நீதிமன்றங்களில் கூடுதல் பணியாளர்களை உருவாக்கவும் அமைச்சரவை முடிவு செய்து இருக்கிறது.

அமைச்சரவையின் மற்றொரு முடிவாக, ஜேஎம்எம் தலைவர் ஸ்டீபன் மராண்டி சட்டசபை சபாநாயகராக தேர்வு பெற்றிருக்கிறார்.