இனி அனைத்து தேர்தல்களும் வாக்குச்சீட்டு மூலமே நடத்த வேண்டும்…. உ.பி. எதிர்க்கட்சிகள்

லக்னோ:

‘‘இந்தியாவில் எதிர்வரும் தேர்தல்களை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும்’’ என்று உ.பி. மாநில அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.

இந்தியாவில் நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல்கள் அனைத்தும் வாக்குச்சீட்டின் முறையில்தான் நடைபெற்றது. பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையம் மின்னணு வாக்கு எந்திரத்தை அறிமுகம் செய்தது முதலே தோல்வியடையும் கட்சிகள் எந்திரங்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தி வருகிறது.2014-ம் ஆண்டில் ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது எந்திர முறைகேடு மூலமே பாஜக வெற்றி பெற்றது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

சமீபத்தில் நடைபெற்ற உ.பி.மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதற்கும் மின்னணு வாக்கு எந்திரம் முறைகேடு தான் காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று முடிவு அறிவிக்கப்பட்ட உ.பி. உள்ளாட்சி தேர்தலில் பாஜக 16 மாநகராட்சியில் 14 இடங்களில் மேயர் பதவியை கைப்பற்றியுள்ளது. இதற்கும் எந்திர முறைகேடு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களில் எந்திரம் பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும், வருங்காலத்தில் அனைத்து தேர்தல்களையும் பழைய முறைப்படி வாக்குச்சீட்டின் முறைப்படிதான் நடத்த வேண்டும் என்று வலியுத்தியுள்ளன. சமாஜ்வாடி கட்சி செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி கூறுகையில், ‘‘14 மேயர் பதவிகளை கைப்பற்றியதன் மூலம் பாஜக மீண்டும் மின்னணு எந்திரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது. வருங்காலத்தில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும்’’ என்றார்.

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘வாக்குச்சீட்டு பயன்படுத்திய பகுதியில் பாஜக 15 சதவீதம் தான் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், மின்னணு எந்திரம் பயன்படுத்திய பகுதியில் 45 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது’’ என்று பதிவிட்டுள்ளார்.

2 மேயர் பதவியை பிடித்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறுகையில் ‘‘மின்னணு எந்திரத்திற்குப் பதிலாக வாக்குக்சீட்டு பயன்படுத்தி 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜக தோற்றகடிக்கப்படும்’’ என்றார்.