குஜராத்: வீதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் அதன் உரிமையாளர் ஆதார் எண்ணுடன் இணைப்பு

காந்திநகர்:

குஜராத் வீதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை அதன் உரிமையாளர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு வருகிறது.

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் கட்டுப்பாடு இல்லாமல் சுற்றித்திரியும் ஆடு, மாடுகளை நகராட்சி அலுவலக பணியாளர்கள் பிடித்து சென்று கொட்டடியில் அடைத்து வைக்கின்றனர். பின்னர் அபராதம் வசூலித்துக் கொண்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

முதல் நாளில் முதல் முறையாக பிடிப்பட்டால் 1,800 ரூபாய் அபராதம், மேலும் கொட்டடி கட்டணமாக ஆயிரம் ரூபாயும், தீவனம் மற்றும் பராமரிப்பு செலவு 650 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. 4வது முறையாக பிடிபட்டால் உரிமையாளர்களிடம் கால்நடைகள் ஒப்படைக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுற்றித்திரியும் ஆடு, மாடுகளை பிடித்து கொண்டு செல்லும் பணியில் நகராட்சி பணியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். கால்நடைகளை பிடித்து செல்ல வாகனங்களில் வரும் நகராட்சி பணியாளர்களுக்கும் ஆடு, மாடுகளை வளர்ப்பவர்களுக்கும் இடையே பல இடங்களில் மோதல் நடந்து வருகிறது.

இந்நிலையில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகளை அவற்றின் உரிமையாளர்களின் ஆதார் எண்ணுடன் இணைத்து நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை சூரத் நகராட்சி மேற்கொண்டுள்ளது. பிடிபடும் கால்நடைகளின் காதுகளில் வரிசை எண்ணுடன் கூடிய பிளாஸ்டிக் பட்டைகளை இணைத்து அதை அவற்றின் உரிமையாளர்களின் ஆதார் எண்ணுடன் அதிகாரிகள் இணைத்துள்ளனர்.

இதன் மூலம் கால்நடைகள் பிடிபட்டதும் உடனடியாக அவற்றின் உரிமையாளர்களை கண்டுபிடிக்கவும், அபராதம் விதிக்கவும் வசதியாக உள்ளதாக சூரத் நகராட்சி உயரதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதுவரை சுமார் 25 ஆயிரம் கால்நடைகள் அவற்றின் உரிமையாளர்களான 1,500 பேரின் ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் 25 ஆயிரம் கால்நடைகள் விரைவில் ஆதார் எண்ணுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.