நேரு, இந்திரா, வாஜ்பாய் வரிசையில் மக்களை கவர்ந்த தலைவர் மோடி: ரஜினிகாந்த் புகழாரம்

சென்னை:

நேரு, இந்திரா, வாஜ்பாய் வரிசையில் மோடி திகழ்கிறார், அவர் மக்களை ஈர்க்கும் தலைவர் என்றும்  நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டினார்.

நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த லோக்சபா மற்றும் தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி  பரபரப்பான அரசியல் காட்சிகள் அரங்கேறி வரும் நிலையில், வரும் 30ந்தேதி மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில் இன்று போயஸ்கார்டன் வீட்டில்  செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், பல்வேறு அரசியல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது,  பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி, மோடி என்கிற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி. அவர் மக்களைக் ஈர்க்கும் தலைவராக இருக்கிறார் என்று புகழாரம் சூட்டினார்.

இந்திய அரசியலை பொறுத்தவரை, தலைவரை வைத்துதான் தேர்தல் வெற்றி கிடைக்கும் என்று கூறிய ரஜினி,  நேருவுக்கு பிறகு இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மக்களை இழுக்கும் தலைவராக இருந்தனர். ராஜீவ் காந்தியை காலம் பலி கொடுத்துவிட்டது. அடுத்து வாஜ்பாய். தமிழ்நாட்டில் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்கள் இருந்தார்கள். அதன்படி பார்ததால், இப்போது, மக்களை ஈர்க்கும் தலைவராக மோடி  உள்ளார் என்று தெரிவித்தார்.

மேலும்,  இந்தியாவில் பல பகுதிகளில் மோடிக்கு ஆதரவான அலை வீசியது. தமிழகத்தில் எதிரான அலை வீசியது. அப்படி ஒரு முறை ஆதரவு அலையோ, எதிர்ப்பு அலையோ வீசிவிட்டால் அதை யாராலும் மாற்ற முடியாது. தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்களால் பாஜக தோல்வியை தழுவியுள்ளது என்று கூறிய ரஜினி, ‘ தமிழகத்தில் மோடிக்கு எதிரான மனநிலை இருக்கிறது; அதனால்தான் தோல்வி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, ஆம் என்று கூறியவர், கண்டிப்பாக  மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்வேன் என்றார்.

நதிநீர் பிரச்சினை தீர்க்கும் வகையில் நிதின் கட்கரி கூறிய கருத்து குறித்து பதில் கூறிய ரஜினி,   கோதாவரி – காவிரி இணைப்பு குறித்து நிதின் கட்கரி கூறியிருப்பது வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது என்று கூறினார்.

தமிழகத்தில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது குறித்த கேள்விக்கு,  எதிர்க்கட்சிகளின் வலுவான பிரசாரமும் அதிமுக கூட்டணி தோல்வியடைய காரணம் என்று தெரிவித்தார்.

மேலும், லோக்சபா மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில்  கணிசமான வாக்குகள் பெற்ற கமல்ஹாசனுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பதாகவும் கூறினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: charismatic leader, Indira Gandhi, JL Nehru, rajiv gandhi, Rajnikanth
-=-