இந்தியாவில் 1000 கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்போரின் எண்ணிக்கை 34 % உயர்வு: ஆய்வு நிறுவனம் தகவல்

டில்லி:

ந்தியாவில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 34 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக பிரபல ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பிரபல ஆய்வு நிறுவனமான  பார்க்லேஸ் ஹுரன் ஆண்டுதோறும், உலகின் பணக்காரர்கள் பட்டில் மற்றும் சொத்து விவரங்களை ஆய்வு செய்து, அதை மதிப்பீட்டு பட்டியலிட்டு வருகிறது. அதன்படி பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து  முதலிடத்தில் இருந்து வருகிறார்.

அதுபோல, நாட்டில் 1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளவர்கள் குறித்த பட்டியலையும் வெளியிட்டு உள்ளது. அதில், இந்தியாவில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 34 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக கூறி உள்ளது.

அதன்படி, இந்தியாவில் உள்ள 831 பேர் வைத்திருக்கும் 52 லட்சம் கோடி ரூபாய், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் கால் பாகத்தை விட அதிகம் என்றும்  அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

 ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய குடிசைப்பகுதியைக் கொண்ட மும்பை தான் பணக்காரர்களின் பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளது.  இங்குள்ள 233 பேர் ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்களை வைத்துள்ளனர்.

தலைநகர் டில்லியில் 163 பேரும், பெங்களூருவில் 70 பேரும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் வைதிருப்பதாகவும் பட்டியலிட்டு உள்ளது.

கடந்த  2017-ம் ஆண்டில் 214 பேர் ஆயிரம் கோடி ரூபாய் சொத்து வைத்திருந்ததாகவும், ஆனால் இந்த ஆண்டு (2018) அது  831-ஆக அதிகரித்துள்ளதாகவும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வளவு சொத்து வைத்திருப்பவர்களின்  சராசரி வயது 60. இவர்களில் 136 பேர் பெண்கள் என்றும் குறிப்பிட்டு உள்ளது.

இவ்வளவு சொத்து வைத்திருப்பவர்களில்,  மருத்துவத்துறையை சேர்ந்தவர்கள்  13.7 சதவிகிதம் பேரும், மென்பொருள் மற்றும் சேவைத்துறையில் 7.9 சதவீதம் பேரும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் வைத்துள்ளனர்.

அதேவேளையில் இந்த ஆண்டு  9 பேரின் சொத்து மதிப்பு இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளது. . இதில் கிரஃபைட் இந்தியாவின் கிருஷ்ண பங்கூரின் சொத்து மதிப்பு 430 % அதிகரித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளது.

கடந்த ஜனவரி மாதம், உலக பொருளாதார மன்றத்தில் அறிக்கை அளித்த ஆக்ஸ்ஃபம் என்ற நிறுவனம் இந்தியாவில் 73 சதவிகித சொத்துக்கள் ஒரே ஒரு சதவீதம் பேரிடம் மட்டுமே உள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை களைய வேண்டும் நமது நாட்டில் வலியுறுத்திப்பட்டு வரும் வேளையில்… மற்றொரு புறம் நாட்டின் பணக்காரர்களும் உயர்ந்துகொண்டேதான் செல்கிறார்கள்….