டில்லி

ந்தியாவில் உள்ள 84 விமான நிலையங்களில் உடல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்வது கட்டாயமாக்கப்பட உள்ளது.

விமான நிலையங்களில் ஒவ்வொரு பயணிகளையும் பாதுகாப்பு சோதனை செய்வது வழக்கமான ஒன்றாகும். இந்த சோதனைகள் காவலர் கையில் வைத்திருக்கும் மெட்டல் டிடக்டர்கள் மற்றும் மெட்டல் டிடக்டர்கள் பொருத்தப்பட்ட வழியாக நடந்து செல்வது ஆகியவை மூலம் நடைபெற்று வருகிறது.  இத்தகைய சோதனை மூலம் வெடிகுண்டு, கடந்தல் பொருட்கள் போன்றவைகளை முழுமையாக  கண்டுபிடிக்க முடிவதில்லை.

அதே நேரத்தில் பயணிகள் கொண்டு செல்லும் லக்கேஜுகள் ஸ்கேனர் மூலம் சோதனை இடப்படுகின்றன. ஸ்கேனர் மூலம் சோதனை இடும் போது சந்தேகத்துக்குரிய பொருட்கள் ஏதும் இருந்தால் உடனடியாக கண்டறிய முடிகிறது. இதனால் மனிதர்களுக்கும் உடல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் அவ்வாறு சோதனை இடும்போது மனிதர்களின் நிர்வாணம் வெளிப்படும் என எதிர்ப்பு கிளம்பியது.

ஆகவே மனித உடல் ஸ்கேனரில் ஆணாக இருப்பினும் பெண்ணாக இருப்பினும் ஒரு நிழல் உருவப் படம் போலவே தெரிய வருமாறு அமைக்கப்பட்டது. அப்போது அந்த உருவத்தில் ஏதாவது உடல் பாகத்துக்கு மேல் ஒளித்து வைக்கப்பட்டிருந்தால் அது மஞ்சள் கலரில் ஒளிரும். அதை வைத்து அந்த பயணி முழு சோதனைக்கு அனுப்பப் படுவார். இது பல உலக நாடுகளில் அமுலில் உள்ளது.

இந்தியாவில் உள்ள 84 விமான நிலையங்களில் இந்த சோதனை அமுலுக்கு வர உள்ளது. இவை 26 மிகவும் பாதுகாப்பான மற்றும் 58 பாதுகாப்பான விமான நிலையம் ஆகும். இந்த சோதனையால் சோதனையின் போது மேலங்கி, காலணிகள், போன்றவற்றை கழற்ற வேண்டிய அவசியம் இருக்காது. அது மட்டுமின்றி சோதனையும் விரைவில் முடியும் என கூறப்படுகிறது.

ஒரு பயணியை ஸ்கேனர் மூலம் சோதனை செய்பவர்க்கு சுமார் 8 விநாடிகள் ஆகும் என்பதால் ஒரு மணி நேரத்தில் சுமார் 300 பேரை சோதனை செய்ய முடியும், மேலும் ஸ்கேனரில் எக்ஸ் ரே கதிர்கள் போன்ற கதிர்வீச்சு அபாயம் கிடையாது. இதனால் கருவுற்ற பெண் உள்ளிட்ட அனைவரையும் இவ்விதம் சோதிக்க முடியும்.