கீழ் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள 2.77 கோடி வழக்குகள்

டில்லி

மாவட்ட மற்றும் வட்ட நீதிமன்றங்களில் 2.77 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற ரஞ்சன் கோகாய் தான் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களில் ஒன்று நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பது என தெரிவித்தார். அதற்காக அவர் அவசர விசாரணைக்கு மனு செய்ய பல திருந்த்தங்களையும் கொண்டு வந்துள்ளார்.

அதே நேரத்தில் மாநிலங்களில் உள்ள கீழ் கோர்ட்டுகளில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தேசிய நீதித்துறை தகவல் மையம் தெரிவிக்கிறது. அந்த தகவலின்படி உச்சநீதிமன்றத்தில் 55000 வழக்குஅள் நிலுவையில் உள்ளன. உயர்நீதிமன்றங்களில் 32.4 லட்சம் வழக்குகளும் மாவட்ட மற்றும் வட்ட நீதிமன்றங்களில் 2.77 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவற்றில் உத்திரப் பிரதேசத்தில் அதிக பட்சமாக 67.7 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 51.2 லட்சம் கிரிமினல் வழக்குகளும் 16.4 லட்சம் வழக்குகள் சிவில் வழக்குகளும் ஆகும். இரண்டாம் இடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலமும் அடுத்தடுத்து மேற்கு வங்கம், பீகார் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இதற்கு முக்கிய காரணம் நீதிபதிகள் பதவி பெருமளவில் நிரப்பப் படாமல் உள்ளதே ஆகும் என கூறப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 5094 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் உத்திரப்பிரதேசத்தில் அதிக இடங்களும் அடுத்ததாக பீகார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களிலும் அதிக அளவில் நீதிபதி பதவிகள் நிரப்படாமல் இருக்கிறது.

மத்திய அரசு உடனடியாக நீதிபதிகளை நியமிக்காவிட்டால் இந்த நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என சட்ட வல்லுனர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.