சண்டிகர்:

ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிகராஷ் சவுதாலா, சிறையில் இருந்தபடியே தனது 82வது வயதில் 12ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.

தேசிய லோக் தள  கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா. இவர் ஹரியானா மாநிலத்தில் முதல்வராக இருந்தபோது, 1999-200ஆம் ஆண்டில் 3000 ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டார்கள். இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் லஞ்சம் வாங்கிக்கொண்டு தகுதி இல்லாதவர்களுக்கு ஆசிரியர் நியமன ஆணை வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது  இந்த விவகாரத்தில் அப்போதைய ஹரியானா முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா மற்றும் அவரது மகன் அஜய் ஆகியோர் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2008ஆம் ஆண்டு இது குறித்து சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரித்தது. அதில் 3 மதிப்பெண்கள், 5 மதிப்பெண்கள் வாங்கியவர்களுக்கு எல்லாம் ஆசிரியர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

வழக்கை விசாரித்த டில்லி நீதிமன்றம், சவுதாலா, அவரது மகன் விஜய் மற்றும் 53 பேர்களை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட ஓம் பிரகாஷ் சவுதாலா,  தற்போது சிறைவாசத்தை அனுபவித்து வருகிறார்.  இந்நிலையில், சிறையில் இருந்தவாறே படித்து வந்த ஓம் பிரகாஷ் சவுதாலா, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதினார். சமீபத்தில் வெளியான தேர்வு முடிவுகளில், ஓம் பிரகாஷ் சவுதாலா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சிறையில் இருந்தவாறே படித்து, தனது 82-வது வயதில் ஓம் பிரகாஷ் சவுதாலா 12ஆம் வகுப்பில் தேர்ச்சி  பெற்று சாதனை படைத்திருக்கிறார்.