காஷ்மீர்: ரூ.36 கோடி மதிப்பு போதை பொருள் கடத்திய 4 பேர் கைது

ஸ்ரீநகர்:

காஷ்மீர் குப்வாரா மாவட்ட எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே ரூ. 36 கோடி ரூபாய் மதிப்பிலான 12 கிலோ பிரவுன் சுகர், ஆயுதங்களுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து எல்லை பாதுகாப்புப்படை ஐ.ஜி. சோனாலி மிஷ்ரா கூறுகையில்,‘‘போதை மருந்து கடத்தப்படுவதாக எல்லை பாதுகாப்புப்படையின் நுண்ணறிவு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை சாவடிகளில் கண்கானிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

கர்னா பகுதியில் அமைந்துள்ள சத்போரா சோதனை சாவடியில் 2 வாகனங்களை சோதனை செய்த போது, அதில் 12 பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருந்த 12 கிலோ எடையுடைய பிரவுன் சுகர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன், மொத்த மதிப்பு 36 கோடி ரூபாய் ஆகும். இவர்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், துப்பாக்கி தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

வாகனத்தில் இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது கைது செய்யப்பட்டவர்களில் ஆலம் பார் மற்றும் யூசுப் கவாஜா எனும் 2 பேர் மட்டுமே இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது’’ என்றார்.